சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதனால் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், சென்னையில் மிதமானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவித்தார். மேலும், குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.