பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு அத்துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வித் துறையில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் திங்கள்கிழமை தனியார் ஐஏஎஸ் அகாடமி திறப்பு விழாவில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் அகாடமி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களுக்கு முதல்கட்டப் பயிற்சி அளிப்பதற்காக ரூ.2 கோடியே 17 லட்சத்துக்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் ஆவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி பாடத்திட்டம் சேர்க்கப்படும்.
மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
அப்போது பள்ளிக் கல்வித்துறை குறித்து ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”ரஜினிகாந்துக்கு அரசின் சார்பாக நன்றி” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.