பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (68) ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் மரியம் (44) அதே சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார்.
லண்டனில் சட்டவிரோதமாக 4 வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு கடந்த 6-ம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும் மரியத்தின் கணவர் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதில் கேப்டன் சப்தார் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
நவாஸின் மனைவி குல்சூம் புற்றுநோய் காரணமாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது குடும்பத்தினர் லண்டனில் தங்கியிருந்தனர். இந்நிலையில் நவாஸும் அவரது மகள் மரியமும் நேற்று முன்தினம் லண்டனில் இருந்து லாகூர் வந்தனர். விமான நிலையத்தில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அங்கிருந்து தனி விமானத்தில் நவாஸும் மரியமும் இஸ்லாமாபாத் அழைத்து வரப்பட்டனர். பின்னர் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். அதே சிறையின் பெண்கள் பிரிவில் மரியம் அடைக்கப்பட்டார். இருவருக்கும் பி வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைப்பதற்கு முன்பாக இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விலக்கு கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் வாசிம் அகமது நேரடியாக அடியாலா சிறைக்குச் சென்று இருவரையும் சிறையில் அடைப்பதற்கான வாரன்டை வழங்கினார். மாஜிஸ்திரேட் முன்னிலையில் இருவருக்கும் உடல்நலப் பரிசோதனை நடத்தப்பட்டது.
விரைவில் மேல்முறையீடு இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் நவாஸ், மரியம், கேப்டன் சப்தாருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து 3 பேர் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விரைவில் மேல் முறையீடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மக்களின் அனுதாபத்தைப் பெறவே நவாஸும் மரியமும் லாகூருக்கு திரும்பி சிறைக்குச் சென்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை எதிர்த்து லாகூர் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் போலீஸாருக்கும் நவாஸின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.