தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் சிறுதாமூர். சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் திண்டிவனத்திற்கு முன்பு உள்ள சிறுதாமூர் கிராமத்திற்கு சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லை. அவசர மருத்துவ உதவிக்கென அரசின் ஆரம்ப சுகாதார நிலையமோ கிடையாது.
கல்வி வசதி உள்ளதா என்றால் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்புவரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். நடுநிலைப்பள்ளிக்குச் செல்ல வெகுதூரம் நடக்க வேண்டும் என்பதால் மாணவிகளில் பெரும்பாலானோர் அய்ந்தாம் வகுப் போடு கல்வி கற்பதை நிறுத்திவிடுகின்றனர். அதனால்தான் இக்கிராமத்தில் பெண்களின் எழுத்தறிவு 26 சதவிகிதம் என்று புள்ளிவிவரம் குறிப்பிடுகின்றது . .
தாங்கள் பயிரிடும் காய்கறிகள், தானியங்கள், மல்லிகை மலர்களை சுமந்து வணிகம் செய்ய சென்னை கோயம்பேடுவரை சென்று திரும்பப் பேருந்து வசதி இல்லாததால் விவசாயிகள் கிடைத்த குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விளைபொருட்களை விற்கும் துயர சூழலும் தொடர்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆனபின்பும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சிறுதாமூரில் கடந்த 2018 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத் திருநாள் முதல் ஒருநாள் விடாமல் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடுகின்றனர் சிறுதாமூர் கிராம மக்கள். கிராமத்தின் மத்தியில் பெரியவர்களும் சிறுவர்களும் ஒன்றிணைந்து தினமும் தேசவணக்கம் செய்து வருவது உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அனுதினமும் காலை 8.45 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி கொடிவணக்கம் செய்து, தேசிய கீதம் இசைத்து சிறுதாமூர் கிராமப் பொதுமக்கள் இந்திய மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். தினமும் காலையில் ஊரின் மத்தியில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடும் திட் டத்தை வங்கியாளர் கவிஞர் விஜயகிருஷ்ணன் சிறுதாமூரில் செயல்படுத்தி வருகின்றார்..
சிறுதாமூர் கிராமத்தில் நடைபெற்ற 74 ஆவது சுதந்திரதின விழாவில் கிராம மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கலந்து கொண் டனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சமூக ஆர்வலர் திருமதி. சௌதாமணி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தினமும் தேசியக்கொடியேற்றி தேசிய கீதம் பாடும் சிறுதாமூர் கிராம மக்களைப் பாராட்டினார். மக்கள் ஒற்றுமையுடன் செயலாற்றினால் உலக சாதனைபுரிய இயலும் என்றும், சிறுதாமூர் கிராமத்தினரின் ஆர்வமும் மகளிர், மற்றும் இளைஞர்களின் ஆற்றலும் வியக்கவைக்கின்றன என்றும் மகிழ்ந்துரைத்தார். . மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், சிறுதாமூர் கிராம மக்கள் அவற்றின் மூலம் பயன்பெறும் காலம் வந்துவிட்டது என்றும், அதற்கான வழிமுறைகளையும் விளக்கிப் பேசினார். படித்துள்ள இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் மத்திய அரசின் திட்ட உதவிகளை பட்டியலிட்டு, உடனடியாக விழாநிறைவில் வந்து கலந்துரையாடிய இளைஞர்களுக்கு உதவ முன்வந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த கிராமமாக சிறுதாமூர் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிறுதாமூர் ஸ்ரீசீனிவாசர் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திரு. விஜயகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரையாற்றினார். கிராம முன்னாள் அலுவலர் திரு.துலுக்காணம், தேசிய நல்லாசிரியர் திரு. சௌமியநாராயணன், ராணுவ முன்னாள் அதிகாரி திரு. கிருஷ்ணஸ்வாமி, தலைமை ஆசிரியை திருமதி. பாக்கியலட்சுமி, ,பொறியாளர் திரு. ஆனந்த், சிவசேவை மாமணி திரு. சிவபால ரவி, திரு. சத்தியநாராயணன், திரு.முருகன், கிராம நிர்வாக அலுவலர் திரு. ரத்தினவேலு, வங்கி ஊழியர் திரு. பொன்னப்பன் ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர். , வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் திரு.ஏழுமலை நன்றி கூறினார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் துணிப்பையைப் பயன்படுத்தும் சிறுதாமூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊரின் நடுவிலுள்ள குளத்தினைத் தாங்களே சுத்தம் செய்து நீர் ஆதாரம் உருவாக்கினர்.
விக்ரம சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் சிறுதாமூரில் அமைந்துள்ள. கி.பி. 10 மற்றும் கி.பி.11 ஆம் நூற்றாண்டுகளில் சிறுதாமூர், அனந்தமங்கலம் மற்றும் அச்சிறுபாக்கம் ஆகிய மூவூர் மக்களும் சேர்ந்து சிறு தாமூரில் ‘பிரஜி ரத்த விழா’ என்னும் சித்திரைப் பவுர்ணமி விழாவை வெகுவிமரிசையா க நடத்தியதாகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளு ம் ஒரே ரதத்தில் பவனி வந்ததாகவும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. ஒற்றுமையின் அடையாளமாக அந்தநாள் முதலே சிறுதாமூர் விளங்கியது என்பது தெரியவருகிறது.
நூறாவது சுதந்திரத் தினத்திற்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுமா என்று தினமும் தேசியக் கொடிவணக்கம் செய்தபடி கேட்கின்றனர் சிறுதாமூர் கிராமப் பொதுமக்கள்.