கவிப்பேரரசு வைரமுத்துவின்
நாட்படு தேறல்
தமிழிசைக் கொண்டாட்டம் இசை இன்று வெளியீடு.!!
கவிப்பேரரசு வைரமுத்து வின்
நாட்படு தேறல்
தமிழிசைக் கொண்டாட்டம்
கலைஞர் டிவி – இசையருவி மற்றும்
‘யூ டியூப்’பில் ஒளிபரப்பாகிறது
கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் இன்று(18.04.2021) முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும்,
6 மணி முதல் யூ டியூப் வலைத்தளத்திலும் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. முதல் பாடலாக ‘நாக்குச் செவந்தவரே’ என்ற நாட்டுப் பாடல் இன்று வெளிவருகிறது. இசை – குரல் : வாகு மசான், இயக்கம் : கிருத்திகா உதயநிதி.
பாடல் வரிகள் :
நாக்குச் செவந்தவரே
நாலெழுத்து மந்திரியே
மூக்கு வெடச்சவரே
முன்வழுக்கை மன்னவரே
கூத்து முடிஞ்சிருச்சு
கொமரிப்புள்ள எதுக்குன்னு
பாத்தும் பாக்காமப்
பரபரன்னு போறீரோ!
ஒருவாய் வெத்தலைய
இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும்
தின்னருசி மறந்திருமோ?
*
வைக்கப் போர்ப் படப்புக்கு
வடஇருட்டு மூலையில
அக்கப்போர் செஞ்சகதை
அய்யனுக்கு மறந்திருச்சோ?
சவரக் கத்திக்குத்
தப்பிச்ச குறுமுடியில்
முகர ஒரசுனது
முழுசாத்தான் மறந்திருச்சோ?
மொட்டு மொட்டு மல்லிகையை
முட்டிமுட்டித் தட்டிவிட்டு
முத்துமுத்து வேர்வைச் சொட்டு
மோந்தகதை மறந்திருச்சோ?
வாழைத் தோப்புக்குள்ள
வளவி ஒடச்சகதை
வாழை மறந்திருக்கும்
வலதுகையி மறந்திருமோ?
*
தேனேறிப் போயிருந்த
சிறுக்கிமக தலைமயிரு
பேனேறிப் போனதய்யா
பேச்சுவார்த்தை இல்லாம
புள்ளித் தேமலுக்கும்
புதுவேட்டி மடிப்புக்கும்
கருப்பட்டி ஒதட்டுக்கும்
கருத்தகிளி அலையுதய்யா
ஆறுசரம் சங்கிலியோ
அட்டிகையோ கேக்கலையே
மஞ்சக் கயித்துக்கு
மனசுக்குள்ள அரிக்குதய்யா
ஆம்பளைக சகவாசம்
அடுத்தொருத்தி வாரவரைக்கும்
பொம்பளைக சகவாசம்
புதைகாடு போறவரைக்கும் இந்த அருமையான பாடல் வரிகள் தொகுப்பை வைரமுத்து இன்று காணொளி காட்சி மூலம் வெளியிடுகிறார்