மாநகர் பகுதியில் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வண்டிகள் மூலம் மக்கள் குடியிருப்புக்கு சென்று காய்கறிகள் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த இரண்டு நாட்களாக வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 132 வாகனங்கள் மூலம் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் இந்த வாகனங்கள் சென்று காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த வாகனங்களுக்குத் தேவையான பாஸ் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.
இன்று காலை வெளி மாவட்டங்களில் இருந்து வந்த காய்கறி லோடுகள் நேரடியாக ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் பிரித்து எடுக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் நேரடியாகச் சென்று விற்பனை செய்யப்பட்டது. காலை 6 மணி முதல் 12 மணி வரை வாகனம் மூலம் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் விற்கப்படும் விலையிலேயே காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன. கூடுதல் விலைக்கு விற்கப்படவில்லை. வாகனங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்க வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இதுபோல் விற்பனையில் ஈடுபடுவோரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.