ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளார். புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனரான அமித் பானர்ஜிக்கு எலான் மஸ்க் ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக அமித் பானர்ஜி, எப்போது இந்தியா வர திட்டம் என கேட்டிருந்தார். அநேகமாக அடுத்த ஆண்டு என எலான் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த டெஸ்லா திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் சட்ட திட்டங்களும், விதிமுறைகளும் இதை செயல்படுத்துவதில் தாமதத்தை உருவாக்குகின்றன என அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை முழுவதுமாக கொண்டுவர இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தால் முக்கிய இடத்தை பிடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
2017-ம் ஆண்டிலேயே இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க முயற்சி செய்தது. ஆனால் உள்ளூர் கொள்முதல் விதி காரணமாக இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி தொடங்க முடியவில்லை.
இந்திய சந்தையை விரும்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக அரசின் விதிமுறைகள் சவாலாக உள்ளன என்று எலான் குறிப்பிட்டிருந்தார். எங்கள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தீபக் அகுஜா இந்தியாவைச் சேர்ந்தவர். டெஸ்லா விரைவில் இந்தியாவுக்கு வரும் என நம்புகிறேன் என்று கடந்த மே மாதம் ட்விட்டரில் கூறியிருந்தார்.
போர்டு மோட்டார் நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அகுஜா 2010-ம் ஆண்டில் டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
கடந்த ஆண்டே டெஸ்லா கார்கள் இந்தியாவுக்கு அறிமுகம் ஆக வேண்டியது. ஆனால் அந்நிய நேரடி முதலீடுகள் குறித்த விதிமுறைகள் காரணமாக இந்திய சந்தையில் நுழைய முடியவில்லை என்று கூறினார்.
ஆனால் இந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். இந்தியாவில் 30 சதவீத உதிரிபாகங்களை கொள்முதல் செய்ய தயாராகவே உள்ளோம். ஆனால் எங்களுக்கான உதிரிபாகங்களை அளித்து இந்தியாவால் உதவ முடியாது என்றும் கூறியிருந்தார்