தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் 307 வது வாரக் கூட்டம் இணையதளம் வாயிலாக 29.05. 2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக, பத்திரிகை உலகில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்து வருபவரும் கதிரவன், மாலை முரசு நாளிதழ்களின் முன்னாள் செய்தி ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திரு .குமார் ராமசாமி ஆதித்தன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
“எங்கள் ஊரான
காயாமொழியில், தொழில் துறையில் ஈடுபட்டு முதன்முதலில் வெற்றி பெற்றவர் ஐயா சி .பா .ஆதித்தனார் அவர்கள் தான்.
அவர்களுடைய வெற்றியின் விளைவாக ,அப்பகுதி மக்கள் குறிப்பாக மிக நலிவுற்ற நிலையில் வாழ்ந்த ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். தொடர்ந்து, அந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பலர் உயர் கல்வி பெற்று சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தனர்.
தமிழ்ச் சமூகத்தில் வணிக வளர்ச்சியை ஏற்படுத்தும் கூட்டு முயற்சியை இங்கு காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முன்மாதிரி முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இத்தருணத்தில் வடமாநிலத்தை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினரின் நினைவு எனக்கு வருகிறது. உலகளாவிய வணிகத்தில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். போதிய முதலீடு கைவசம் இல்லாத, தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவர் புதிதாக தொழில் தொடங்க முயன்றால் அவருக்கு உடனடியாக கடன் கொடுத்து உதவுகின்றனர். முன்னுக்கு வந்த பிறகு சிறிது சிறிதாக அவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். தொழிலில்
புதிதாக கால்பதிக்கும் வணிகருக்கு இதுபோல உதவி கிடைக்கும் நிலை இங்கேயும் உருவாக வேண்டும்.
நவீன தொழில்நுட்பம் பத்திரிகை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. அச்சு ஊடகத்தை தொடர்ந்து காட்சி ஊடகம் , அதையடுத்து சமூக ஊடகம் இப்போது பேசு பொருளாக உள்ளது.
பலருடைய பார்வைக்குப் பிறகு அச்சு ஊடகத்தில் செய்திகள் பதிவு செய்யப்படுவதால் இன்னமும் கூடுதல் நம்பகத்தன்மை கொண்டதாக அது திகழ்கிறது.
மாற்றத்தை உணர்ந்து, நவீன தொழில்நுட்பத்தை கையாளத் தெரிந்தவர்கள் அதிக வெற்றிகளை குவிக்கிறார்கள்.
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வருகைக்குப் பிறகு ,
வணிகம் சந்தை புதிய பரிமாணம் பெற்றுள்ளது.
என்னுடைய நண்பர் ஒருவர் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை அருமையாக பயன்படுத்தி தம் வணிகத்தை சிறப்பாக செய்கிறார். அவர் சீனா மற்றும் அமெரிக்காவில் வணிக கிடங்குகள் ஏற்படுத்திக்கொண்டு சென்னையில் இருந்தபடி, பொருட்களை வாங்கி விற்கும் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறார் . என்னைக் கவர்ந்த தமிழ் வணிகர்களில் இவரும் ஒருவர்,
என்றார் திரு. குமார் ராமசாமி ஆதித்தன்.
தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில் கூறியது;
“ஐயா. பா. ராமச்சந்திர ஆதித்தனார் ஈழத் தமிழர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் என்பதை தமிழுலகம் அறியும். எனவே, ஈழப்பிரச்சினை தொடர்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டோம். அப்படி வெளியான சில செய்திகள் இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு தலைவலியைக் கொடுத்தன.இப்படி எழுதாமல் இருப்பதற்கு
முட்டுக்கட்டை போட்டு பார்த்து, ஓய்ந்து போயினர்.
1980 ம் ஆண்டில் சென்னை மாலை முரசில் செய்தியாளராக சேர்ந்த நான், சில ஆண்டுகள் மதுரை மாலை முரசில் பணியாற்றினேன். 1983 ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் பெரும் கலவரம் வெடிக்க போகிறது என்பதை முன்கூட்டியே நாங்கள் உணர்ந்தோம். அந்த கலவரத்தின் விளைவாக, ஏராளமான ஈழத் தமிழர்கள் உயிர் தப்பி தமிழகம் வந்தனர். அப்போது நான் நேரடியாக ராமேஸ்வரம் சென்று கரையிறங்கிய பலரிடம் பேட்டி கண்டு, இலங்கையில் தமிழ் மக்கள் பட்ட துயரங்களை விரிவாக பதிவு செய்தேன்.
அந்த கால கட்டத்தில்,
இலங்கையில் இருந்து வந்த மலையகத் தமிழர்கள் பலரை கொடைக்கானல் மலையில் குடியமர்த்தி இருந்தனர். அடிப்படை வசதிகள் இல்லாத பெருந்துன்பம் நிறைந்த ஒரு வாழ்க்கைச் சூழலில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவர்களை பேட்டி கண்டு எழுதுவதற்கு நான் கொடைக்கானல் சென்றேன். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மலை உச்சிக்கு நடந்தே செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையில் தொடங்கிய என் நடை கடினமான மலைப்பாதையில் இரவு வரை நீடித்தது.
அப்போது நான் பட்ட கஷ்டத்துக்கு உரிய பலன் கிடைத்தது. அவர்களைப் பற்றி மாலைமுரசில் நான் செய்த விரிவான பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் துன்பம் தீர்வதற்கு அந்த செய்தி வழிவகுத்துக் கொடுத்தது, என்றார் திரு குமார் ராமசாமி ஆதித்தன்.