சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.!!
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும், அதன் காரணமாக அரசுத் துறைகளின் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதும், மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.
ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டுவதற்கே இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான எதிர்க்கட்சி குரல் எழுப்ப வேண்டிய நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவது – அ.தி.மு.க. அரசுக்கு ஆக்கபூர்வமான விவாதங்களின் மீது இருக்கும் அவநம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும்.- விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் இந்த அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை.
அதே அலட்சிய மனப்பான்மையில் ஆட்சி செய்யும் அதிமுக அரசு, தற்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், குறுவை சாகுபடிக்கான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாத அவல நிலைமை, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் இன்றுவரை கர்நாடகம் தண்ணீர் திறக்காதது, அதற்கு எவ்விதத் தொடர் நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காதது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது மத்திய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையால் தமிழ்நாட்டில் தொடரும் மாணவிகளின் “நீட்” தற்கொலைகள் எல்லாம் ; தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறதா? இல்லையா? என்ற நியாயமான கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.
ஆகவே, தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும்
அதி முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினைகளை எல்லாம் விவாதிக்கவும், துறை சார்ந்த மான்யக் கோரிக்கைகள் பற்றி மக்கள் பிரதிநிதிகள் விவாதித்து நிதி நிலை அறிக்கையின் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகளை வளர்ச்சித் திட்டங்களுக்கும், தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படுத்திடவும் ; உடனடியாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வேளை தன்னைச் சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்களே தொடுக்கும் கேள்விக் கணைகளால் எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, தாமதம் செய்து பிரச்சினைகளைத் தள்ளிப் போடுவதற்கு ஏதுவாக சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முதலமைச்சர் பயம் கொள்வாரானால், ஆளுநர் அவர்கள் உடனடியாக முக்கியமான இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையைக் கூட்ட ஆணை பிறப்பித்து ஜனநாயகக் கடமையை உரிய முறையில் ஆற்றிட வேண்டும் என்று சட்டப் பேரவையின் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
சட்டமன்றம் கூட்டப் படுவதை மேலும் தள்ளிப் போடுவது, தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கை செய்திடக் கடமைப் பட்டிருக்கிறேன்.