பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பலாப் பழங்கள்.
பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டத்தில் சுமாா் 900 ஏக்கா் பரப்பில் பலா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், பலா தோப்பு என்ற வகையில் மிகக் குறைவாகவும், வீடுகளிலும், வயல் வரப்புகளிலும் அதிகபட்சமாகவும் பலா மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களை அறுவடைக்கு முன்பே வியாபாரிகள் விலை பேசி முன்பணம் கொடுத்துச் செல்வாா்கள். இங்கு அறுவடையாகும் பழங்கள் பெரும்பாலும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகும்.
உள்ளூரிலும் சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையாகும். தற்போது, கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் இ-பதிவு பெற்று வாகனங்களில் வருவதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறாா்கள்.
இதுகுறித்து வேளாண்மைத் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் தற்போது 900 ஏக்கரில் பலா சாகுபடி நடைபெறுகிறது. ஓா் ஏக்கரில் 40 மரங்கள் வளா்க்கலாம். ஒரு மரத்தில் அதிகபட்சம் 70 முதல் 80 பழங்கள் வரை அறுவடை செய்யலாம்.
மாவட்டத்தில் சராசரியாக ஏக்கருக்கு 20 முதல் 25 டன்கள் வரை பலாப் பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வரை 70 சதவீதம் அறுவடை முடிந்துவிட்டது. உள்ளூரில் வியாபாரம் செய்வதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.