ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ராவ் (38). மருத்துவரான இவர் கரஞ்சேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரின் மனைவி மருத்துவர் பாக்கியலட்சுமி, குண்டூர் மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவர் தம்பதியான பாஸ்கர் – பாக்கியலட்சுமி இருவரும் இணைந்து கிராமப்புற மக்களுக்கு நோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு செய்வது, மருத்துவ முகாம்கள் நடத்துவது எனச் சமூகம் சார்ந்த பார்வையுடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த இரண்டு வருட காலமாக கரஞ்சேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் பாஸ்கர், கொரோனா முதலாம் அலையின் போதிலிருந்து கரஞ்சேடு கிராம மக்கள் அனைவரையும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள நோய்த்தொற்று பாதிப்பு குறித்தும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு செய்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றும்படியும் மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அலட்சியமாக இருந்து வந்த கரஞ்சேடு கிராம மக்கள், மருத்துவர் பாஸ்கரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டு, நோய்த்தொற்று குறித்து விழிப்புடன் இருப்பதாகக் கிராம அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர் என்பதைத் தாண்டி கிராம மக்கள் மீது பாஸ்கர் காட்டிய அன்பும், அக்கறையும் அவரை கரஞ்சேடு கிராமத்தின் குடும்பங்களில் ஒருவராக இணக்கமாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.