அனைவருக்குமான அரசு என காட்டும் ஆளுநர் உரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டு.!!

சென்னை

 

 

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சட்டமன்றத்தில் ஆளுநர் நிகழ்த்திய உரை இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதமாக ஆளுநர் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார பாராட்டி வரவேற்கிறோம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு சிறப்பு நியமனங்களின் மூலமாக நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மகிழ்வோடு வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

இந்த கோரிக்கையை கடந்த ஆட்சியின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். புதிதாய் அமைந்திருக்கும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எமது கோரிக்கைக்கு செவி சாய்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெருநகரங்களையொட்டி துணை நகரங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் நெருக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். கிராமப்புற மக்களுக்கு இடையூறு இல்லா வண்ணம் அது செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்.

நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் குறித்த தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. அதனைப் பாராட்டி வரவேற்கிறோம்.

வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் என்ற அறிவிப்பு பாராட்டத் தக்கதாகும். உழவர்களோடு உழவுத் தொழிலாளர்களும் இதனால் பயனடைவார்கள்.

அரசு வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாகத் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அறிவிப்பு இளைஞர்களுக்கு குறிப்பாக, தமிழ் உணர்வாளர்களுக்கு பெரும் நம்பிக்கை தருவதாகும்.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கென நோபல் பரிசுபெற்ற, உலக அளவில் மதிக்கப்படும் பொருளாதார நிபுணர்களைக்கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைக்குழுவானது, இந்த அரசு மக்கள் நலனில் காட்டும் அக்கறைக்கு சிறந்த சான்றாகும்.

அடுத்துவரும் நிதிநிலை அறிக்கையில் இந்த அரசு அறிவிக்கவுள்ள திட்டங்களுக்கு கட்டியம் கூறுவதாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.

மொத்தத்தில் பாராட்டி வரவேற்கத் தக்க ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளைக் கொண்ட உரை இது என திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *