ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று சட்டப்பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படியே இந்த சொல் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை குற்றமாகப் பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும் என்றும், ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர் ஒன்றிய அரசு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இதற்கும் பதிலளித்த ஸ்டாலின், அண்ணா ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட திமுக அறிக்கையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கினார்.