தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் புகைப்படக்கலைஞர் சம்பத் தலைமையில் இணைந்து சென்னை அமைந்தகரை பகுதியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 1965ல் திறந்து வைக்கப்பட்ட பழமை வாய்ந்த சென்னை நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன், கூடுதல் கல்வி அலுவலர் பாரதிதாசன், பள்ளியின் தலைமை ஆசிரியை முத்தமிழ் செல்வி சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதிதமிழன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, இந்தப்பள்ளி மிகவும் பழமைவாய்ந்த பள்ளி. மாநகராட்சி பள்ளிகளின் அடையாளமாக திகழ்கிறது. நான் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றபோது இந்த பள்ளிக்கான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து தந்திருக்கிறேன். இந்த பள்ளி கட்டிடத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார், தொடர்ந்து தொன்மை மாறாமல் இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் அழகியல் உணர்ச்சி மிகுந்தவர்கள். அழகியலை வெளியில் கொண்டு வருபவர்கள். கிளியின் மூக்கு, புல்லின் நுனி என்று அழகியலை படம் பிடிப்பவர்கள், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் இருந்தாலும் இந்த தொன்மைவாய்ந்த பள்ளியை தேடிப்பிடித்து அழகியல் மாறாமல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக உதவி செய்து வருபவர்கள். இந்த பள்ளி மாணவன், தனியார் பள்ளி மாணவன் போல் ஆங்கிலம் பேசினான். எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன் மாணவ-மாணவிகளை வைத்து தொடர்ந்து நல்ல பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருபவர். இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறார், அவருக்கும் எனது நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதார ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரி இனியன், பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைந்தகரை கே.3 காவல் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் மேற்கொண்டனர்.
செய்தி த.சங்கரன்