சென்னை, ஆக.11 – திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இதில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது கட்சியின் தலைவர் கருணாநிதி மரணமடைந்து விட்டதால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மரணமடைந்தார். நேற்று முன்தினம் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2016 முதல் கருணாநிதி உடல்நலம் குன்றி செயல்பட முடியாத நிலையில் இருந்தார். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியின் பணிகளை அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் கருணாநிதி மரணமடைந்து விட்டதால் கட்சி தலைவர் பதவி காலியாக உள்ளது. தற்போது திமுக செயற்குழு அவசர மாக கூடுகிறது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 14.8.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள் : தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்தல்.இவ்வாறு அன்பழகன் கூறியிருக்கிறார்.