இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.!!
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி கூறியதாகவும் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார்.சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முந்தைய நாள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முக்கியப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆலோசிக்கப்பட்டன.
பொருளாதார விவகாரத்துறை மற்றும் வருவாய் செலவினத் துறைகள் சார்பில் பிரதமரிடம் விரிவான பொருளாதார ஆய்வறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லீ பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து திருப்தி தெரிவித்துள்ளதாக கூறினார். நடப்பாண்டிலும் 3 புள்ளி 3 சதவீத நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான செலவுகள் ஆகஸ்ட் 31 தேதி வரை 44 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும் அருண்ஜேட்லீ தெரிவித்தார். இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் அதிக அளவில் இருக்கும் என தாம் நம்புவதாகவும் கூறிய நிதியமைச்சர், ஜிஎஸ்டி பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் வரும் மாதங்களில் ஜிஎஸ்டியின் வசூல் தொகையில் இதன் தாக்கம் தெரிய வரும் என்றும் குறிப்பிட்டார்