ஏழு பேரையும் விடுதலை செய்யாத தமிழக ஆளுநர் அவரது மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகையை மறுமலர்ச்சி தி. மு. கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.!!
*இந்த முற்றுகை போராட்டத்தில் தி மு க, தி க , வி சி க , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , த வா கா, ம ம க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த தோழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு ஒய்வறியா போராளி வைகோ அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர்*
*ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு!*
*எடப்பாடி அரசின் இரட்டை வேடம்;*
*ஆளுநர் பன்வாரியின் அடாவடி!*
*வைகோ கண்டனம்*
27 ஆண்டுகள் நரக வேதனைத் துன்பத்தில் சிறையில் வாடும் ஏழு பேரை விடுதலை செய்ய முன்வராத தமிழக ஆளுநர், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய ஆணை பிறப்பித்து இருப்பது, அக்கிரமத்தின் உச்சகட்டம்.
91-96 இல் முதல் அமைச்சராக இருந்தபோது, தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் சொத்துகளைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட வழக்கில், 2000 ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
அதனால் ஆத்திரம் அடைந்த அண்ணா தி.மு.க. தலைமை, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுமையும் பொதுச்சொத்துகளைச் சூறையாடவும், பேருந்துகளை அடித்து நொறுக்கவும், தீயிட்டுக் கொளுத்தவும் தூண்டி விட்டது.
அதன் விளைவாக, 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள், கோவை அரசு வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள், வேளாண்மை ஆய்வுக்காகத் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தபோது, இலக்கியம்பட்டி என்ற ஊருக்கு அருகில் தடுத்து நிறுத்திய அண்ணா தி.மு.க. வன்முறைக்கும்பல், கல்லூரி மாணவிகள் பேருந்திற்குள் இருக்கின்றனர் என்பது தெரிந்தும், எச்சரிக்கை கூடச் செய்யாமல் பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
சென்னை ஹேமலதா, விருத்தாசலம் காயத்ரி, நாமக்கல் கோகிலவாணி, நெருப்பில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். 16 மாணவிகளுக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் எழுப்பிய ஓலக்குரல், கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும்.
இந்தக் கொடூரப் படுகொலையைச் செய்ததாக 24 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில், நெடுஞ்செழியன், ரவீந்திரன் (எ) மது, முனியப்பன் ஆகிய மூவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
மேல்முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், தூக்குத்தண்டனையை உறுதி செய்தன.
உலகின் 136 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதால், தூக்குத்தண்டனை கூடாது என்பதுதான், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கொள்கை நிலைப்பாடு ஆகும்.
ஆனால், 1991 மே 21 ஆம் நாள், திருபெரும்புதூரில் நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அணு அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகள் மீது, ஜனநாயகத்திற்கு விரோதமான தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட வழக்கில், 1997 ஆம் ஆண்டு, 26 பேருக்குத் தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது.
தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இயலாது என்பதால், நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 1999 ஆம் ஆண்டு, 19 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. நளிளி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையைக் குறைத்து, வாழ்நாள் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு அளித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், தமிழக ஆளுநரிடம் கருணை மனு விண்ணப்பித்தனர். அன்றைய தி.மு.க. அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில், நளினியின் தூக்குத்தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து, 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக ஆளுநர் ~பாத்திமா பீவி ஆணை பிறப்பித்தார். மற்ற மூவரும், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு செய்தனர். அந்த மனு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது.
2011 ஆகஸ்ட் ஆகஸ்ட் 26 அன்று, உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. அதன்படி, செப்டெம்பர் 9 ஆம் தேதி மூவருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று, தமிழக அரசு வேலூர் மத்தியச் சிறைக்குத் தெரிவித்தது. நான் வேலூர் மத்தியச் சிறைக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து, தூக்குத் தண்டனையை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தேன்.
ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று, இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்தேன். அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நீதியரசர் நாகப்பன், நீதியரசர் சிவசுப்பிரமணியன் அமர்வில், தூக்குத் தண்டனைக்குத் தடை ஆணை கேட்டு வாதாடினார்.
அதன் விளைவாக, உயர்நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது.
பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களே அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் அமர்வு, 2014 பிப்ரவரி 18 அன்று மூவரின் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, வாழ்நாள் சிறைத் தண்டனையாக அறிவித்தபோதிலும், ‘அந்தத் தண்டனையில் இருந்தும் விடுதலை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்’ எனத் தீர்ப்பு அளித்தது.
2014 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 ஆம் நாள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவை, ஏழு பேரையும் விடுதலை செய்வது எனத் தீர்மானித்து, அந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதலை செய்யக்கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த அந்த வழக்கில், 2018 செப்டெம்பர் 6 ஆம் நாள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, ஏழு பேரையும் விடுதலை செய்யத் தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்தது.
இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு, மரண தண்டனையை வாழ்நாள் சிறைத்தண்டனையாகக் குறைக்கவும், வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யவும், தமிழக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கின்றது.
ஆளுநரின் அதிகாரம் என்பது, மாநில அமைச்சரவையின் அதிகாரம்தான்!
அந்த அடிப்படையில், 2018 செப்டெம்பர் 9 ஆம் நாள், ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அந்தத் தீர்மானத்தை ஏற்று உடனடியாக ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டிய கடமையைச் செய்யாமல், வஞ்சக நோக்கத்துடன், இதுகுறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்பதாகக் கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய அரசு, ஏழு பேர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதனால், ஏழு பேர் விடுதலை செய்யப்படவில்லை என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்னணியில், கல்லூரி மாணவிகள் மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்த அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று கொடியவர்களையும் விடுதலை செய்ய ஆளுநர் ஆணை பிறப்பித்து விட்டதாக வந்துள்ள செய்தி, அதிர்ச்சி அளிக்கின்றது.
ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்பார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள், மத்திய அரசின் புரோக்கராகச் செயல்பட்டு வருகின்றார். தமிழக வரலாற்றிலேயே இத்தகைய மோசமான ஒரு ஆளுநர் பொறுப்பு வகித்தது இல்லை. நீதியையும், மனித உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கின்ற வேலையில் தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்.
எந்தக் குற்றமும் செய்யாமல் 27 ஆண்டுகள், தங்கள் வாழ்வையே சூன்ய வெளியில் தொலைத்துவிட்டு, வேதனையில் தவிக்கும் ஏழு பேரை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யாமல், இத்தகைய அநீதி நடப்பதற்கு, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசும் காரணம் எனக் குற்றம் சாட்டுகிறேன்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பின் காரணமாக, ஏழு பேரை விடுதலை செய்ய, ஒப்புக்கு ஒரு தீர்மானம் போட்டதைத் தவிர, அவர்களை விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியிலும் அண்ணா தி.மு.க. அரசு ஈடுபடவில்லை. 3 அண்ணா தி.மு.க.வினரை மட்டும் விடுதலை செய்கிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தீர்ப்பையே உதாசீனப்படுத்திய மத்திய அரசுக்கும், அதன் ஏஜெண்டான தமிழக ஆளுநருக்கும் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்,.
இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, ஏழு பேரும் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கையோடு கடமை ஆற்றுவோம். நீதியின் கதவுகள் திறக்கும்!
*வைகோ*