புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில்கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி.!!

தமிழகம்

புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில்கொண்டு, பதவியேற்றதில் இருந்து மாநில அரசுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் துணைநிலைஆளுநர் கிரண்பேடி அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்”

  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அ பேட்டி..

புதுச்சேரியில் முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களை, இன்று (17-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், கழகத் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் பின்வருமாறு:

கடந்த 13ஆம் தேதியில் இருந்து இன்றுவரை 5வது நாளாக புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் போக்கினை கண்டிக்கக்கூடிய வகையில், இன்னும் சொல்லப்போனால் ஆளுநரை உடனே திரும்பபெற வேண்டுமென வலியுறுத்தி புதுவை மாநிலத்தின் முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து இந்த தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஆளுநராக பொறுப்பில் இருக்கும் கிரண் பேடி அவர்கள் மாநிலத்தின் மக்களுக்கு செயல்படுத்த இருக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த விடாமல், முட்டுக்கட்டை போட்டு தன்னுடைய சர்வாதிகார போக்கை தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களுக்கு நன்மைகளை செய்யும் வகையில் 39 கோரிக்கைகள் அதன் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த நிகழ்வே எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஒருவேளை, புதுவை மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென சொன்னால் இப்படி கொள்ளைப்புற வழியாக வரக்கூடாது. தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணி இருந்தால் மக்களை சந்தித்து தேர்தல் மூலமாக வரவேண்டும். அதுமுடியாது என்பதால் ஆளுநர் கிரண்பேடி அவர்களை பயன்படுத்திக் கொண்டு இந்த கேவலமான ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அதனால் தான் புதுவையில் போலீஸ் ராஜ்யம் நடத்துகிறார்கள். ஏற்கனவே கிரண்பேடி போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கிறார்கள். அப்போது அவர் திறம்பட பணியாற்றி இருக்கலாம். ஆனால், ஆளுநராக பதவியேற்று மோடியின் கட்டளையை ஏற்று மாநிலத்தின் உரிமைகளை பறித்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த புதுவை மாநிலத்தை, கிரண்பேடி அவர்கள் டெல்லியில் இருக்கும் திகார் சிறை போல் மாற்றி, மக்களை அதில் அடைக்கலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார் என்றே கருதுகிறேன்.

எனவே, ஆளுநர் அவர்களை எதிர்த்து கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இந்த தர்ணா போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு கவனிக்க வேண்டும். இதுவரையில் இந்தப் பிரச்னை குறித்து மோடி அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது வெட்கக்கேடான ஒன்று. பிரதமர் இந்தப் பிரச்னை அறிந்து உடனடியாக இதனை தீர்த்து வைத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அவர் அந்தப் பணிகளில் ஈடுபடாததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோல், உடனடியாக ஆளுநர் அவர்களை மத்திய அரசு திரும்பபெற வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

அண்மையில் நீங்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்திருக்கலாம். யானை ஒன்று திருப்பூர் கண்ணாடிப்புதூர் என்ற மக்கள் இருக்கின்ற பகுதிக்குள் வந்துவிட்டது. அதனால் அந்தப் பகுதி மக்கள் பீதிக்கு ஆளானார்கள். உடனே, அந்த யானையை பிடித்து மீண்டும் முகாமில் அடைத்து விட்டார்கள். யானையாவது தான் பயன்படுத்தி வந்த, தான் இருந்த பகுதிக்கு தான் வந்தது. நான் ஆளுநரை தவறாகப் பேசுகிறேன் என யாரும் கருதிவிடக்கூடாது. ஆனந்த விகடன் பத்திரிகையில் கூட அந்த சின்னத்தம்பி யானையைப் பற்றி ஒரு தலையங்கமே தீட்டியிருக்கிறார்கள். அதுகூட பிடிவாதம் பிடித்திருந்தால் கூட, தன்னுடைய வழித்தடத்திற்கு வர வேண்டுமென நினைத்திருக்கிறது. ஆகவே, சின்னத்தம்பி யானை எப்படி முகாமில் அடைக்கப்பட்டு உள்ளதோ, அதேபோல் ஆளுநர் கிரண்பேடி அவர்களை உடனடியாக திரும்பபெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏதோ விமர்சனம் செய்து கொச்சைப்படுத்துகிறேன் என யாரும் நினைத்து விட வேண்டாம். காரணம், இது மக்களுடைய பிரச்னை. மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்கிறது. இதில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு கண்டிட வேண்டும். காரணம், அவர் வந்ததில் இருந்து மாநில அரசுக்கு இடையூறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே, மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர்: கமல் உங்களை கடுமையாக விமர்சித்து வருகிறாரே?

கழகத் தலைவர்: நான் அரசியலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *