ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வருகின்றனர். தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய வருவர். இக்கோயில் முக்கிய நிகழ்வான ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தன.
கோயில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் ராஜா குமரன் சேதுபதி, கண்காணிப்பாளர் ககாரின் ராஜ், பேஷ்கர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடர் நிகழ்வாக ஜூலை 31ல் ஆடி அமாவாசை, ஆக., 2ல் தேரோட்டம் நடைபெறுகிறது . ராமநாதசுவாமிக்கும், பர்வத வர்த்தினி அம்பாளுக்கும் ஆக.5 இரவு 7:30 முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. கோயில் அறங்காவலர் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ஜெயா, கோயில் கட்டுமான பணி உதவி கோட்ட இயக்குநர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின் ராஜ், நேர்முக உதவியாளர் கமலநாதன், மேலாளர் முருகேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
.