இந்தியாவிலேயே முதல் முறையாக, பார்வையற்ற பெண் ஒருவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் துணை கலெக்டராக பதவி ஏற்று சாதித்து காட்டியுள்ளார்.!!
மஹாராஷ்டிர மாநிலம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர், பிரன்ஜால் பாட்டீல், 31. இவருக்கு, 6 வயதாக இருக்கும் போதே, இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. ஆனாலும், சோர்ந்து விடாமல், எப்படியாவது உயர் கல்வி படித்து, சாதித்து காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தார். முதுநிலை பட்டம் பார்வையற்றோருக்கான பள்ளியில் படிப்பை முடித்து, கல்லுாரியில் சேர்ந்தபோது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற ஆர்வம், அவரிடம் அதிகரித்தது. மும்பை, புனித சேவியர் கல்லுாரியில், அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்ற பிரன்ஜால், பின், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், முதுநிலை பட்டம் பெற்றார்.
இதற்கு பின், ஐ.ஏ.எஸ்., கனவை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கினார். தன் முதல் முயற்சியில், 2016ல், மத்திய அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று, தேசிய அளவில், 773வது இடத்தை பிடித்தார். அடுத்தாண்டில் மீண்டும் தேர்வெழுதி, தேசிய அளவில், 124வது இடத்தை பிடித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். இதன் மூலம், நாட்டின் முதல் பார்வையற்ற பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது.