இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது டாடா அரங்கில் காட்சிப்படுத்தப்படிருந்த எஸ்யுவி வாகனம்.
அதற்கு அப்போது சூட்டப்பட்டிருந்த தற்காலிக பெயர் ஹெச்5எக்ஸ் (H5X). தற்போது இந்த மாடலுக்கு `ஹாரியர்’ (Harrier) என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. 5 பேர் பயணிக்கும் எஸ்யுவி மாடலுக்கு இந்தப் பெயர். இதில் 7 பேர் பயணிக்கும் வகையிலான மற்றொரு மாடலுக்கான பெயர் விரைவில் அறிவிக்கப்போவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த கார் டாடா மோட்டார்ஸின் ஒமேகா பிளாட்பார்மில் தயாரிக்கப்பட உள்ளது. இதில்தான் ஜாகுவார் லேண்ட் ரோவர் எல் 550 மாடல் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. லேண்ட் ரோவர் உதிரி பாகங்கள் விலை உயர்ந்தவை. இவை பெரும்பாலும் அலுமினியத்தால் ஆனவை. இதே பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் ஹாரியரின் விலையை கட்டுக்குள் வைக்க சில பாகங்கள் இரும்பினால் தயாரிக்கப்பட்டு அவை பயன்படுத்தப்பட உள்ளன. இதனால் வாகனத்தின் எடை 1,650 கிலோவை விட அதிகமாக வாய்ப்புள்ளது. இந்த வாகனங்களின் சக்கரம் 2,741 மி.மீ விட்டம் உடையதாக இருக்கும்.
இந்த மாடல் கார் பிற நிறுவனங்களின் தயாரிப்பான ஹூண்டாய் கிரெடா, ரெனால்ட் காம்டுர், ஜீப் கம்பாஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காருக்கான 2 லிட்டர் டீசல் என்ஜினை கிரைஸ்லர் நிறுவனம் தயாரித்துத் தருகிறது. இது நான்கு சிலிண்டரைக் கொண்டதாகவும் டர்போ டீசல் இன்ஜின் செயல்பாட்டை உடையதாகவும் இருக்கும். இதில் உள்ள இன்ஜின்தான் ஜீப் கம்பாஸில் பயன்படுத்தபடுகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 5 பேர் பயணிக்கும் மாடலுக்கு 140 ஹெச்பி திறன் கொண்ட என்ஜினும், 7 பேர் பயணிக்கும் மாடலுக்கு 170 ஹெச்பி திறன் கொண்ட இன்ஜினையும் இது பயன்படுத்த உள்ளது.