ரூபாய் மதிப்பு சரிவு உங்களை பாதிக்கும்

வணிகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் ரூ.69.09-ஆக சரிந்திருப்பதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் மீண்டும் செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தொடர்ந்து இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நிதிக் கணக்கீடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பொது மக்களுக்கு என்னவகையான பாதிப்புகள் ஏற்படும்? ரூபாய் மதிப்பு சரிவதால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதைப் பார்க்கலாம். ரூபாய் மதிப்பு சரிவு சில குறிப்பிட்ட முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்தால், எந்தப் பொருட்களின் விலை உயரும் என்றும் பார்க்கலாம்.

பர்ஸை பதம்பார்க்கும்

இந்த ஆண்டு வெளிநாடுகளில் கல்வி பயில இருப்பவர்கள் மற்றும் கடந்த ஆண்டு கல்விக் கடன் பெற்று பாதிப் படிப்பை முடித்திருப்பவர்களுக்கு சிக்கல்கள் அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்திய ரூபாயில் அளிக்கப்பட்டுள்ள கல்விக் கடன் அப்போதைய டாலர் மதிப்புக்கு நிகராக அளிக்கப்பட்டு இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 64 ரூபாயாக இருந்தபொழுது 2 ஆண்டு படிப்பு செலவான 50,000 டாலருக்கு நிகராக இந்திய ரூபாயில் 32 லட்சத்தை நீங்கள் கல்விக் கடனாக பெற்றிருந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

முதல் வருடத்தில் ரூ.16 லட்சத்தை செலவழித்துவிட்டீர்கள் அதாவது உங்களது படிப்பு செலவில் பாதி தொகையான 25,000 டாலரை செலவழித்துவிட்டீர்கள். இப்பொழுது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ஆக இருக்கும்பொழுது மீதமுள்ள 16 லட்ச ரூபாய் உங்களது கல்வி செலவுக்கு போதுமானதாக இருக்காது. ஏனெனில் 16 லட்ச ரூபாய் தற்போதைய மதிப்பில் உங்களுக்கு 23,188 டாலரை மட்டுமே தரும். எனவே மேலும் தேவைப்படும் 1,812 டாலரை ( இந்திய மதிப்பில் ரூ.1.25 லட்சம்) நீங்கள் உங்கள் சேமிப்பிலிருந்து எடுத்து செலுத்தவேண்டும் அல்லது மேலும் ஒரு கல்விக் கடனைப் பெற வேண்டும்.

இருப்பினும் கடனை திருப்பி செலுத்தும்போது ரூபாய் மதிப்பு சரிவடைந்தது உபயோகமாக இருக்கும். படிப்புக்கு பிறகு வெளிநாடுகளில் வேலைபெறும் ஒருவருக்கு பண பரிமாற்று விகிதம் பயன்தரும். ரூபாய் மதிப்பு சரிவின் மூலம், குறைந்த டாலருக்கு அதிக அந்நியப் பணம் கிடைப்பதால் கல்விக் கடனை வேகமாக திருப்பி செலுத்த இயலும்.

சுற்றுலா

வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான தொகை உயரும். எரிபொருள் விலை உயர்வதால், விமான கட்டணம் மற்றும் தங்குமிடங்களுக்கான செலவு அதிகரிக்கும். சரிவடைந்த ரூபாய் மூலம் குறைந்த அந்நியப் பணமே கிடைக்கும் என்பதால் உங்களது தனிப்பட்ட செலவுகளை நீங்கள் குறைக்கவேண்டியது இருக்கும்.

கார்கள்

மடிக் கணினிகள், மொபைல் ஃபோன்களை தயாரிக்க தேவையான சர்க்யூட் போர்டுகளை நாம் இறக்குமதி செய்துவருகிறோம். ரூபாய் மதிப்பு சரிவதால் இந்த உற்பத்தியாளர்களுக்கு செலவு அதிகரிக்கும். ஓரளவுவரை இதனை உற்பத்தியாளர்கள் தாங்கிக்கொள்வார்கள், எனினும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்தால் மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள், மடிக் கணினிகள் போன்றவற்றின் விலை உயரும். இதேநிலை வாகன உபகரணங்களை இறக்குமதி செய்யும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏற்படும். மாருதி, டெயோடா, ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கார் விலை உயரும்.

பொதுவாக, கச்சா எண்ணெய் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு சரிவது பணவீக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், எரிபொருள் விலை உயரும். தொடர்ந்து மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து உங்களது மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கும்.

நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேறுவதற்கு இது சரியான நேரம் அல்ல. சொத்துகளை விற்பதன்மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், ரூபாய் மதிப்பு சரிவால் குறைந்தபட்ச அந்நியப் பணம்தான் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *