“டாக்டர் திருவேங்கடம் பெயரில் மருத்துவ சேவை மையங்களை அரசு நடத்த வேண்டும்”!
மூத்த பத்திரிக்கையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை!!
சென்னை
அக்டோபர் 2
ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய டாக்டர் திருவேங்கடத்தின் பெயரில் மருத்துவ சேவை மையங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை விடுத்தார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் ஏழை எளிய மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாகும். இங்கு நீண்ட காலம் கிளினிக் நடத்தி ,மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வந்தவர் டாக்டர் திருவேங்கடம். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 1970 களில் எம்பிபிஎஸ் படித்து குடிசை மக்கள் பகுதியிலேயே மருத்துவ சேவை செய்து தன் வாழ்நாளை கழித்தவர் டாக்டர் திருவேங்கடம். இதனால், வியாசர்பாடி பகுதியில் ஐந்து ரூபாய் டாக்டர் என்றும் மக்கள் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயது மூப்பு காரணமாக இவர் மறைந்தார். இவருடைய மகத்தான மக்கள் சேவைகளை உணர்ந்த மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
டாக்டர் திருவேங்கடத்தின் நினைவைப் போற்றும் வகையில், இவருடைய மார்பளவு உருவச்சிலை திறப்பு விழா வியாசர்பாடியில் ,இவர் நடத்தி வந்த மருத்துவ சேவை மையத்தில் நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் அவருடைய சிலையை திறந்து வைத்தார். மாலைமுரசு, கதிரவன் நாளிதழ்களின் முன்னாள் செய்தி ஆசிரியரான இவர் டாக்டர் திருவேங்கடத்துக்கு புகழஞ்சலி செலுத்தி உரையாற்றுகையில் பேசியதாவது:
” இன்று காந்தியடிகள் பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம். இருவரும் டாக்டர் திருவேங்கடத்துக்கு மிகவும் பிடித்தமான தலைவர்கள். இந்த நாளில் அவருடைய சிலை திறக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.
இங்கு பேசியவர்கள், அவருடன் பழகியவர்கள் தெரிவித்த தகவல்கள்,
இவர் எப்படிப்பட்ட மாமனிதர் என்று வியக்க வைக்கிறது.
காசு ,பணம் அறவே இல்லாத நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையுடன் மருந்துவாங்க பணமும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
மேல் படிப்பான எம்.டி, படிப்பதற்கான வாய்ப்பு இரண்டு முறை வலிய தேடி வந்தும்,
தன் தாயை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த அரிய வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
இங்கு நிறைய மாணவ மாணவியர் வந்து உள்ளீர்கள். இவரை நீங்கள் ஒரு முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
நம் நாட்டைப் பொருத்தவரை மருத்துவம், பொறியியல் இந்த இரண்டை மட்டும் காண்பித்து இதை நோக்கி மாணவர்களை வலிய தள்ளுகிறார்கள். இந்த அணுகுமுறை சரியல்ல. இந்த இரண்டையும் தாண்டி நிறைய படிப்புகள் உள்ளன. உயர் படிப்புக்கு செல்லும் போது எதில் ஆர்வம் உள்ளதோ அதை எடுத்து படியுங்கள். எந்த துறையில் நீங்கள் இருந்தாலும் அதில் சாதனையாளர் ஆகி, மக்களுக்கு உதவுங்கள்.!
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நிறைய மருத்துவர்கள் நம்மிடம் உள்ளனர். தினம் ஒரு மணிநேரம் ஏழை- எளிய மக்களுக்கு பணியாற்ற அழைத்தால் அவர்கள் கண்டிப்பாக வருவார்கள்.
அவர்கள் உதவியுடன் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் டாக்டர் திருவேங்கடம் பெயரில் மருத்துவ சேவை மையங்களை செயல்படுத்த வேண்டும். அரசுக்கு நான் கூறும் யோசனை இது.
மருத்துவத் துறை உள்பட பல துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு நாம்தான் ரோல்மாடலாக உள்ளோம். காமராஜர் போட்ட அடித்தளத்தின் மீது தொடர்ந்து மற்ற தலைவர்களும் சீராக மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவு இது.
மருத்துவத் துறையில் சிறப்பாக உள்ள நம் மாநிலத்திற்கு “நீட்” போன்ற தேர்வு தேவையற்றது.
கட்டணம் இல்லாமல் மருத்துவக் கல்வியை மாணவர்கள் பெறும்போதுதான் திருவேங்கடம் போன்ற மக்கள் மருத்துவர்கள் நிறையபேர் உருவாவார்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்
பத்திரிகையாளர் தாம்பரம் சுப்பிரமணி, நம்பிக்கை சிகா நல அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் தூயவன் முதலான சமூக ஆர்வலர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து ஐயா அவர்களின் மகன் ஆனை. பன்னீர்செல்வம், சம்பத், பத்திரிகையாளர்கள் திருவெற்றியூர் முருகன், அகஸ்டின் உட்பட சமூக ஆர்வலர்கள் உள்ளூர் மக்கள் விழாவில் பங்கேற்றனர்.
டாக்டர். திருவேங்கடத்தின் துணைவியார் சரஸ்வதி, அவரது மகள் டாக்டர் ப்ரீத்தி திருவேங்கடம் மற்றும் குடும்பத்தினர் விழாவிற்கு வந்தோருக்கு நன்றி தெரிவித்தனர்.
விழாவிற்கு வந்த மாணவ- மாணவியருக்கு செடியும் திருக்குறள் புத்தகமும் வழங்கப்பட்டது.
-வீ-