பாஜக சார்பில் தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டை நோக்கி பேரணி..!!

சென்னை

தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டு அங்கிருந்து பேரணியாக கோட்டை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 11 கட்சி மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையொட்டி பாந்தியன் சாலை முனையில் இருந்து ராணி மெய்யம்மை அரங்கம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சாலை முழுவதும் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.

12 மணி அளவில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போராட்ட மேடைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அண்ணாமலை வாழ்க, மோடி வாழ்க, பாரத் மாதாகி ஜே என கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க. அரசை சொல்லாததை செய்ய சொல்லவில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைதான் செய்ய சொல்கிறோம்.

கடந்த 6 மாதத்தில் மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.17-ம் குறைத்து இருக்கிறது. ஆனால் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல பெட்ரோல்-டீசல் விலையை குறைத்ததா? கடந்த 4 நாட்களுக்கு முன்பு தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு பற்றி தளபதியிடம் கேட்காதீர்கள், தேர்தல் அறிக்கை தயாரித்தது டி.ஆர்.பாலுதான் என்கிறார்.

அப்படியானால் அவரை தானே முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும். கடந்த 3 நாட்களாக தி.மு.க. அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகிகளும், மாவட்டம் தோறும் கூட்டம் போட்டு பட்டத்து இளவரசருக்கு முடி சூட்ட தீர்மானம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பிரதமர் மோடி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் வாழ்க்கைக்கு மாதம் ரூ.4 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்து கொண்டு இருக்கிறார்.

8 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்த சாதனையும் கடந்த ஓராண்டில் தி.மு.க. அரசின் வேதனையும் மக்களுக்கு புரியதான் செய்யும்.

இன்னும் 4 நாட்களில் 2 மிகப்பெரிய ஊழல் பட்டியலை வெளியிட போகிறேன். அப்போது இந்த அரசின் முறைகேடுகள் வெளியே தெரிய வரும்.

கச்சத்தீவை மீட்க பா.ஜனதா களத்தில் இறங்கி இருக்கிறது. அதை செய்து காட்டுவோம்.

தமிழகத்தில் இருந்து செலுத்தும் வரி, மத்திய அரசு வழங்கிய நிதி பற்றிய தவறான தகவல்களை முதல்-அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

இப்போது இங்கு திரண்டு இருக்கிற கூட்டம் சாமானிய மக்களால் நிரம்பி இருக்கிறது.

இதுதான் அரசியல் எழுச்சியாக மாறும். மீடியா என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டு பா.ஜனதாவுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் மீடியாக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள். அதே நேரம் ஏசு பிரான் சொன்னது போல ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை நாங்கள் திருப்பி காட்ட மாட்டோம். திருப்பி அடிப்போம். மீடியாக்களை சிவப்பு விளக்கு என்று விமர்சித்தவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இந்த போராட்டத்தின் வாயிலாக அரசுக்கு நான் சொல்வது உடனடி யாக நீங்கள் சொன்னதை செய்யுங்கள். இல்லா விட்டால் இன்னும் 20 நாட்கள் கழித்து மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் இருப்போம். அப்போதும் செய்யவில்லை என்றால் 30 நாட்கள் கழித்து திருச்சியில் 10 லட்சம் பேரை திரட்டி மிகப்பெரிய பேரணி நடத்துவோம். அது ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிதான். தமிழகத்திலும் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

தி.மு.க. அரசு கைது செய்யலாம். பொய் வழக்கு போடலாம். பா.ஜனதா தொண்டர்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

சில தியாகங்கள் மூலம்தான் வெற்றி பெற முடியும். தி.மு.க.வா? பா.ஜனதாவா? வெற்றி பெற போவது யார்? என்று பார்த்து விடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அண்ணாமலை தலைமையில் அவர்கள் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் கைகளில் பா.ஜனதா கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.

இந்த பேரணியில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ வினாயகம், எச்.ராஜா,  நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி,டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா, வினோஜ் பி செல்வம், பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், விஜய் ஆனந்த், சாய்சத்தியன் கராத்தே தியாக ராஜன்,பாஜக பொதுச்செயலாளர் திருமதி பிரமிளா சம்பத், சுமதி வெங்கடேசன், ரமேஷ், திருப்பதி நாராயணன், கனகராஜ்,மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சக்கரவர்த்தி, தனசேகர்,செம்பாக்கம் வேதசுப்பிரமணியம்,மீனவர் அணி சதீஷ்குமார் பாஜக மகளிர் அணி தலைவி ஜெயஸ்ரீ,பாஜக மகளிர் பிரிவு நிர்வாகிகள் லலிதா மோகன், ரமா,சுஜாதா ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *