குடிசைப்பகுதி மக்களுக்கு
8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது!
மயிலாப்பூர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு!!
சென்னை
செப்-15
குடிசைப்பகுதி மக்களுக்கு 8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது என்று மயிலாப்பூரில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் அங்கு வசித்து வந்த குடிசை மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன .
இந்த வீடுகள் பழுதாகி விட்டதால் இவற்றை அகற்றி விட்டு தற்போது உள்ள மூன்று அடுக்கு மாடி வீடுகளுக்கு பதிலாக புதிய அடுக்குமாடி வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அப்பகுதியில் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இக் கூட்டத்தில் குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் கரிகாலன், குடிசை மாற்று வாரிய பொறியாளர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிர்ச்சி
தற்போது உள்ள மூன்றடுக்கு குடியிருப்புகள் கட்டத் தொடங்கிய காலத்தில் இந்த இடம் பல தனி நபர்களுக்கு சொந்தமாக இருந்தது. பொதுநலன் கருதி அவர்கள் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்தனர்.
தற்போது, புதிதாக கட்டும் குடியிருப்புகள் எட்டு மாடிகளுடன் லிப்ட் வசதி கொண்டதாக இருக்கும் என்றும் கணிசமான நிலத்தை அரசு கையகப்படுத்த போவதாகவும் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை அதிகாரிகள் மத்தியில் ஆவேசமாக வெளிப்படுத்தினர்.
லிப்ட் பழுதானால் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். குறிப்பாக வயதானவர்கள் அவதிப்படுவார்கள். இப்போது உள்ள மூன்றடுக்கு குடியிருப்புகள் போலவே கட்டித் தாருங்கள். எக்காரணம் கொண்டும் எங்கள் பகுதியின் அளவை குறைத்துவிடக் கூடாது என்று முறையிட்டனர்.கூட்டத்தில் 8 அடுக்கு கட்டிடம் மத்திய அரசு, மாநில அரசு, பயனாளிகள், நிதியை கொண்டு கட்டப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
வாரியம் தற்போதுள்ள எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தி அங்குள்ள மக்களுக்கு ஒதுக்கீடு செய்தது போக
வேறு பகுதி மக்களுக்கு
(வெளி ஆட்களுக்கு) விற்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அவர்களின் இந்த திட்டத்தை ஏற்க மறுத்த பகுதி மக்கள் தற்போதுள்ள நிலையிலேயே வீடுகளை கட்டித் தரவேண்டும்.
தமிழக அரசு முழு மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்து பழுதடைந்த கட்டிடங்களை ஒவ்வொரு பகுதியாக இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினார் .
பரபரப்பு.
பொதுமக்கள் ஏராளமான அளவில் திரண்டு ஆவேசமாக காணப்பட்டதால் கூட்டம் முடியும் வரை அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.