தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

சென்னை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து
திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஏழை எளிய நடுத்தர பிரிவு மக்களின் அரசுப் பணி கனவை நனவாக்கும்
வாய்ப்புகளில் ஒன்றுதான், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் போட்டித்தேர்வுகள், கடுமையாக உழைத்து, நேர்மையாகத்
தேர்வெழுதினால் போதும், அரசு வேலை நிச்சயம் என்ற நிலையே இதுநாள்வரை
இருந்து வந்தது.

ஆனால் தேர்வுகளில் முறைகேடு, தகுதியற்ற நபர்களை உறுப்பினர்களாக
நியமிப்பது… போன்ற அதிமுக அரசின் கேவலமான நடவடிக்கைகளால்
ஆணையத்தின் மீது விண்ணப்பதாரர்கள் வைத்திருந்த நம்பிக்கை
கொஞ்சம்கொஞ்சமாக கலையத் தொடங்கியது.

அதன் உச்சமாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில்
தேர்ச்சிபெற்று முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் பெரும்பாலானோர்
இராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்று
தெரியவந்தது. இதற்கு முன்பு நடந்த குரூப் 2 ஏ தேர்விலும் இதே மையத்தில்
தேர்வெழுதியவர்களே முதல் 55 இடங்களில் 37 இடங்களைக்
கைப்பற்றியிருந்தனர்.

– இந்த முறைகேடுகள் குறித்த போலீஸ் விசாரணையில், இரண்டு
தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குள் தொடர்பு இருப்பதும்
விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 16 பேர்
கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள பலரை போலீசார் தேடியும்
வருகின்றனர்.

‘கட்டுக்கோப்புடன் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளில் உயர் அதிகாரிகள்,
ஆட்சியாளர்கள் துணையில்லாமல், அதுவும் தேர்வாணையம்,
தலைமைச்செயலகம், தேர்வு மையங்கள், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள்…!
எனப் பல தரப்புகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க
வாய்ப்பேயில்லை’ என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

உண்மை இப்படியிருக்க, பதிவறை எழுத்தர், வாகன ஓட்டுநர் என
இந்தவழக்கில் இதுநாள்வரை கைதாகியுள்ளவர்கள் அனைவரும் கடைநிலை
ஊழியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய கடைநிலை ஊழியர்களை கணக்குக் காட்டிவிட்டு, முறைகேட்டின்
மூலகாரணமான பெரிய முதலைகளைத் தப்பிக்கவைக்கும் வேலைகளில் சிபிசிகடி
போலீஸ் இறங்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இவைதவிர, முந்தைய தேர்வுகள் பலவற்றிலும் அதுவும் குறிப்பாக இதற்கு
முன் நடந்த குரூப் 1-ன் முதன்மைத் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும்
மிகப்பெரிய மோசடி நடந்ததாக அப்போது தகவல் வெளியானது.

இப்படி அதிமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆணையத்தில் தொடர்ந்து
நடந்து வரும் முறைகேடுகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி
போலீசார் விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பது சாதாரண
மக்களுக்குக்கூடப் புரியும் விஷயம். அதனால்தான் கழகத் தலைவர் அவர்கள்,
‘இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை
விடுத்திருந்தார்.

இவ்வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில்
சிபிஐ போலீசார் விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்பது நிதர்சனமான
உண்மை . மேலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதவியில் நீடித்தால் அவர்
வழக்கு விசாரணைக்கு இடையூறு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவரை
பதவியிலிருந்து கவர்னர் விடுவிக்கவேண்டும்.

இந்த வழக்கை சிபிஐ போலீசாரின் விசாரணைக்கு மாற்றக்கோரியும்,
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யக்கோரியும் கழகத்
தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் திமுக இளைஞரணி மற்றும்
மாணவரணியின் சார்பில் நாளை (04-02-2020, செவ்வாய்க்கிழமை) காலை
சரியாக 9 மணிக்குச் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை
இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதில், சென்னையின் கழக மாவட்டங்கள் நான்கிலிருந்தும் இளைஞர்
அணி மற்றும் மாணவரணி தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு
ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல உதவுமாறு
கேட்டுக்கொள்கிறோம். என தெரிவித்தனர்.

சி.வி.எம்.பி.எழிலரசன்

செயலாளர்,
திமுக மாணவர் அணி

உதயநிதி ஸ்டாலின்,

செயலாளர்,
திமுக இளைஞர் அணி

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *