தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மளிகைப்பொருட்கள்
தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அந்த கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றிருந்தாலும் தஞ்சை மாநகரில் வசிக்கும் மக்களின் வசதிக்காக அத்தியாவசிய தேவையான மளிகைப்பொருட்கள், காய்கறிகள், பழங்களை வீதி, வீதியாக சென்று விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
மேலும் மளிகைப்பொருட்களை மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து கொண்டே செல்போன் மூலம் பேசி அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் ஆர்டர் செய்து உரிய விலையில் பொருட்களை பெற்று கொள்ளலாம். இதற்காக சூப்பர் மார்க்கெட், மளிகைக்கடைகள், அரிசிக்கடைகள், மீன் கடை என 13 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மினிவேன்கள், தள்ளுவண்டிகள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக தஞ்சை மாநகரில் மட்டும் 73 மினிவேன்கள், 20 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்தந்த வார்டுகளில் வியாபாரம் செய்ய வேண்டும் என ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், இவர்களை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக நேற்று 35 மினிவேன்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை தொடங்கப்பட்டது.
தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மளிகைப்பொருட்கள், அரிசி, மீன்கள் என மக்கள் ஆர்டர் செய்யும் அனைத்து பொருட்களும் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கப்படும். இதற்காக தனிக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.