லாக்டெளனில் மகளுடன் சைக்கிளில் டீ விற்கச்சென்ற தாய்; கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் சர்ப்ரைஸ் உதவி! 👇👇👇

தமிழகம்

கடைகள் திறக்காததால் டீ விற்பனை செய்ய முடியவில்லை. வறுமை வாட்டியதால் வீட்டிலேயே டீ போட்டு சைக்கிளில் வைத்து விற்பது என முடிவு செய்தேன்”.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தன் பெண் குழந்தையுடன் சைக்கிளில் டீ விற்கப் புறப்பட்டார் விஜயலட்சுமி. அவரைப் பற்றி கேள்விப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், அவருக்கு தேவையான மளிகைப் பொருள்களை அனுப்பிவைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதுபற்றி டீ விற்பனை செய்த விஜயலட்சுமியிடம் பேசினோம்.

“சொந்த ஊர் திருச்சி. எனக்கு மூன்று பெண் குழந்தைகள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்தோம். இங்கு வாடகைக்கு வீடு பிடித்து வசித்து வருகிறோம். ஆரம்பத்தில் நானும் என் கணவர் ஸ்ரீனிவாசனும் தனியார் ஜவுளிக்கடைக்கு டீ சப்ளை செய்துவந்தோம். லாக்டெளன் காலத்தில் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. சிறிது நாள் நான் எதுவும் செய்ய முடியாமல் இருந்தேன். கடைகள் திறக்காததால் டீ விற்பனை செய்ய முடியவில்லை. வறுமை வாட்டியதால் வீட்டிலேயே டீ போட்டு சைக்கிளில் வைத்து விற்பது என முடிவு செய்தேன்.

அதன்படி வீட்டில் டீ தயாரித்து சைக்கிளில் வைத்து சாலைகளில் விற்கத் தொடங்கினேன். எனக்குத் துணையாக என் மகளும் உடன் வந்தாள். சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும் சில இடங்களில் சாலை ஓரம் இருந்தவர்கள் டீ வாங்கிக் குடித்தார்கள். டெரிக் ஜங்சன் போன்ற இடங்களில் டீ நன்றாக விற்பனையானது.

டீ சாப்பிட்டவர்கள் சுவையாக இருப்பதாகக் கூறினர். மேலும் தினமும் தொடர்ந்து டீ கொண்டுவரும்படி கூறினர். ஆனால், `லாக்டெளன் நேரத்தில் வெளியே வரக்கூடாது’ என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் டீ விற்பனையைத் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே விற்பனையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

என் மூன்று பெண் குழந்தைகளும் பெண்கள் பள்ளியில் படிக்கிறார்கள். மூத்த மகள் 4-ம் வகுப்பு படிக்கிறாள். 2 வது மகள் இரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் எல்.கே.ஜியும் படிக்கிறாள். பள்ளி ஆசிரியர்களும் அடிக்கடி உதவி செய்து வந்தனர். கடந்த கொரொனா காலத்தில் அரிசி, பருப்பு கொடுத்து உதவினார்கள். இந்த லாக்டெளன் நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நான் டீ விற்பதை ஒருவர் புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டார். இதை அறிந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்கள்

அதன் பிறகு கலெக்டர் அனுப்பியதாக மளிகைப் பொருள்களை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்தார்கள். அதற்காக கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா நேரம், வீட்டு நிலைமை மிகவும் சிரமமானது. நான் ஒன்பதாம் வகுப்புவரை படித்திருக்கிறேன். எனக்கு சின்னதாக ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தால் குடும்பத்தை காப்பாற்ற வசதியாக இருக்கும். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்புறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *