சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது – தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதம்..
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது என தேவசம் போர்டு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
முதலில், 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த இவ்வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று முன்தினம் முதல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது . மனுதாரர்களின் வக்கீல்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்த நீதிபதிகள், அதற்குள் வாதத்தை முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். முதலில், வக்கீல் ஆர்.பி.குப்தா வாதிட்டார்.
நேற்றைய விசாரணையின் போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்த ஆண்களைபோல் பெண்களிக்கும் சம உரிமை உள்ளது. இறைவழிபாடு என்பது ஆண்களைப்போல் பெண்களுக்கும் பொருந்தும். அதை ஒரு சட்டம் சார்ந்து நீங்கள் செயல்படுத்த முடியாது. பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பெண்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து இதுவரை வலுவான காரணம் சொல்லப்படவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் கூறி இருந்தார்.
இன்றைய விசாரணையின் போது சபரிமலை தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது. அப்போது சபரிமலையில் 10 முதல் 55 வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காரணமாக கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என வாதிட்டது.