வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!!
சென்னை ஜீலை 20
இந்தியாவில் வதந்திகளை பரப்ப அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு துணை போனதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஃபார்வர்டு தகவல்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்துவது தவிர போலி செய்திகளை கட்டுப்படுத்த வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள் என்றும் வாட்சப் நிறுவனத்தை அரசு வினவியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் 2வது நோட்டீசை வாட்சப் நிறுவனத்திற்கு அரசு அனுப்பியுள்ளது.
வாட்சப்பில் பரவும் குழந்தை கடத்தல் உள்ளிட்ட தகவல்கள் அடிப்படையில் தாக்குதல் சம்பவங்கள் நாட்டின் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. வதந்தி பரவலை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஒரு நோட்டீசை வாட்சப் நிறுவனத்திற்கு அரசு அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து ஃபார்வர்டு தகவல் என்பதை காட்டும் வசதி கொண்டு வரப்படும் என அரசிடம் வாட்சப் உறுதியளித்திருந்தது. மேலும் வாட்சப் தகவல்கள் குறித்த விழிப்புணர்வு வழிகாட்டுதல்களையும் முக்கிய செய்தித் தாள்களில் ஒரு பக்க விளம்பரமாக வாட்சப் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.